தமிழகத்தில் அரசு வேலைக்காக 64.22 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு

வயது வாரியான பதிவுதாரர்களில் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக உள்ளனர்.

Update: 2023-11-08 02:08 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர் மாத நிலவரப்படி, தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உள்ளது. அவர்களில் ஆண்கள் 29 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர், பெண்கள் 34 லட்சத்து 41 ஆயிரத்து 766 போ், மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்கள் 294 பேர்.

வயது வாரியான பதிவுதாரர்களில் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக உள்ளனா். 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 16 லட்சத்து 4 ஆயிரத்து 32 பேரும், 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 27 லட்சத்து 72 ஆயிரத்து 34 பேரும் உள்ளனா். 31 முதல் 45 வயது வரையுள்ள பதிவுதாரா்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 91 ஆயிரத்து 431 ஆகவும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரா்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 847 ஆகவும் உள்ளனா். பதிவு செய்துள்ளவா்களில் 6 ஆயிரத்து 787 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா்.

ஒட்டுமொத்த எண்ணிக்கையில், மாற்றுத் திறனாளி வகைப் பிரிவினரும் உள்ளனா். 98 ஆயிரத்து 763 ஆண் மாற்றுத் திறனாளிகளும், 10 ஆயிரத்து 650 பெண் மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 327 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக தமிழக அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்