எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு:குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் 95.99 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டத்தில் 95.99 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்தது.
நாகர்கோவில்:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டத்தில் 95.99 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் 4-வது இடத்தை பிடித்தது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 பேர் தேர்வு எழுதினர். இதேபோல் குமரி மாவட்டத்தில் 431 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 657 மாணவர்களும், 11 ஆயிரத்து 484 மாணவிகளுமாக மொத்தம் 23 ஆயிரத்து 141 பேர் தேர்வு எழுதினர்.
இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 10 ஆயிரத்து 932 மாணவர்களும், 11,281 மாணவிகளும் என மொத்தம் 22,213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
95.99 சதவீதம் தேர்ச்சி
இவர்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.78-ம், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.23-ம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 4¾ சதவீதம் (349 பேர்) அதிகமாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். குமரி மாவட்ட அளவில் மொத்த தேர்ச்சி சதவீதம் 95.99 ஆகும்.
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் வாழ்த்தினர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் பாராட்டினார்.
4-வது இடம்
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டம் 97.22 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தது.
ஆனால் இந்த ஆண்டு பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு அடுத்த படியாக குமரி மாவட்டம் 95.99 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4-வது இடத்திற்கு பின்தங்கியது.