ஜோதிமணி எம்.பி. புகாரால் அதிர்ச்சி - செல்வப்பெருந்தகை
முகவர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிரச்சினை இருந்து வந்தது உண்மைதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த குழு அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, இன்னொரு பக்கம் திமுகவை மறைமுகமாக சாடி வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 2021ல் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
''ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது,'' என கரூர் தொகுதி எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். ஜோதிமணியின் இந்த பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.கரூர் தேர்தல் படிவம், முகவர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிரச்சினை இருந்து வந்தது உண்மைதான்.மேலிடத்தில் இருந்து இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணி பதிவிட்டது ஆச்சரியமளிக்கிறது. சகோதரி ஜோதிமணியின் புகார் குறித்து ஏற்கெனவே மேலிடத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன் என்றார்.