கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்திவெட்டு
ஆம்பூர் அருகே கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஆம்பூர்
ஆம்பூர் அருகே பெரிய கோமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவருக்கு ரூபா (38) என்ற மனைவியும் மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனால் ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உமாரபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.