எஸ்.ஐ.ஆர். பணியால் தமிழகத்தில் 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்ற வாக்காளர்கள் எண்ணிக்கை
எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.;
கோப்புப்படம்
தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி முதல் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிவடைந்த நிலையில், நேற்று (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாத நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த பட்டியலில் 5 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் தான் இடம்பெற்றுள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது, 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, 15.18 சதவீத வாக்காளர்கள் குறைந்து போய் உள்ளனர். இதில், இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672. இரட்டை பதிவுகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 278. இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 881.
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்களும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்களும் இருந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்களும், 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது 5 கோடியே 82 லட்சத்து 62 ஆயிரத்து 973 வாக்காளர்களும் இருந்துள்ளனர்.
2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்களும், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்களும் இருந்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களை தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இருந்த வாக்காளர்களே தற்போது உள்ளனர். அதாவது, வாக்காளர்களின் எண்ணிக்கை 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது.
தற்போதைய வரைவு வாக்காளர்கள் கணக்குப்படி, இறந்துபோன 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேரும், இரட்டை பதிவுகளில் சிக்கி நீக்கப்பட்ட 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேரும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது. அதாவது, 30 லட்சத்து 92 ஆயிரத்து 950 பேருக்கு இனி வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில், முகவரி மாறி இடம்பெயர்ந்த 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், முறையான ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பித்தால், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. இதிலும், சுமார் 50 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது.
அப்படி பார்த்தால், 47 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு என்ன நஷ்டம் என்று பார்த்தால், இனி கள்ள ஓட்டு போடுவது குறையும். அதே நேரத்தில், தேர்தலின்போது பதிவாகும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.