சோளிங்கர் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயிலில் மலையேறிய நிலையில் பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-05-02 12:24 GMT

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மலையடிவாரத்திலிருந்து 1,305 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். நரசிம்மர் யோக நிலையில் காட்சியளிப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கடந்த மார்ச் மாதம் ரோப் கார் சேவையைத் தொடங்கியது. இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வதற்காக இன்று வந்துள்ளார். பராமரிப்புப் பணி காரணமாக இன்று ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டதால், 1,305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு நடைபயணமாக புறப்பட்டுள்ளார்.

கொளுத்தும் வெயிலில் அவர் மலையேறிய நிலையில், 1,200-வது படியில் ஏறிவரும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் டோலி மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்