சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் 3 பவுன் நகை அபேஸ் - மர்ம நபருக்கு வலைவீச்சு

சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் 3 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-12-14 10:53 IST

கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (35 வயது). இவரது மனைவி புஷ்பா (30 வயது). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் அவர்களுடைய மகள் கீர்த்தனா (12 வயது) மட்டும் தனியாக இருந்தாள்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் பைக்கில் சந்திரசேகரின் வீட்டிற்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், கீர்த்தனாவிடம் உனது அம்மா என்னிடம் கட்ட வேண்டிய கடன் தொகையை பீரோவில் வைத்துள்ளார் என்றும், அதை எடுத்து தருமாறும் கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய கீர்த்தனா, பீரோ சாவியை அந்த நபரிடம் கொடுத்து அவரையே பணம் எடுத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் பீரோவில் இருந்த 3 பவுன் நகையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தான் வந்த பைக்கில் அங்கிருந்து தப்பிச்சென்றார். அதன்பிறகே கீர்த்தனாவுக்கு அந்த மா்மநபர் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது.

தொடர்ந்து புஷ்பா வீட்டிற்கு வந்ததும், அவரிடம் நடந்த சம்பவம் குறித்து கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பா, இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் நகையை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்