அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-03-03 03:34 IST

நாகர்கோவில்:

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

குழந்தைக்கு பஸ் டிக்கெட்...

குமரி மாவட்டம் பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வவேல். சம்பவத்தன்று இரவு செல்வவேலின் பெண் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் வரை செல்லும் ஒரு அரசு பஸ்சில் மனைவி, குழந்தையுடன் பயணம் செய்தார். வீராணமங்கலம் பகுதியில் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் கேட்டுள்ளார். உடனே செல்வவேல் தான் ஏற்கனவே எடுத்த 2 பயண டிக்கெட்டுகளை கொடுத்துள்ளார். அதற்கு டிக்கெட் பரிசோதகர் பெண் குழந்தைக்கு ஏன் டிக்கெட் வாங்கவில்லை என கேட்டுள்ளார்.

அப்போது குழந்தைக்கு 2½ வயது தான் ஆகிறது என கூறியுள்ளார். அதற்கு டிக்கெட் பரிசோதகர் குழந்தைக்கு 3 வயது இருக்கும் எனவும் பயணச்சீட்டு வாங்காததால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் செல்வவேல் ரூ.500-ஐ அபராதமாக செலுத்தி விட்டு முறையான ரசீது கேட்டுள்ளார்.

போக்குவரத்து கழகத்திற்கு அபராதம்

ஆனால் அந்த அதிகாரி உரிய பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்று விட்டார். இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே செல்வவேல் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.2 ஆயிரம் மற்றும் ஏற்கனவே செலுத்தப்பட்ட அபராதத் தொகை ரூ.500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்