கொழுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ

கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் கொழுந்து விட்டு காட்டுத்தீ எரிந்தது.;

Update:2023-03-04 20:20 IST

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவுவதால் செடி, கொடிகள், புற்கள் காய்ந்து கருகி உள்ளன. இதன் எதிரொலியாக மலைப்பகுதியில் உள்ள வனத்துறை, வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்கள், தனியார் தோட்டங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மேல்மலை பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டது குறித்து சிலரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் நகரின் முக்கிய பகுதியான சேரன்நகரில் குடியிருப்பு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள காய்ந்த செடி, கொடிகளில் நேற்று பகலில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென தீ பரவியது. வீடுகள், மின்சார கம்பங்கள் அருகே தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்