மோட்டார் சைக்கிளில் வாலிபரை கடத்திச்சென்று கொன்ற கும்பல்

மோட்டார் சைக்கிளில் வாலிபரை கடத்திச்சென்று ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-07-26 00:23 IST

சிவகாசி, 

மோட்டார் சைக்கிளில் வாலிபரை கடத்திச்சென்று ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கடத்தல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூரில் வசித்து வருபவர் வைரமுத்து. இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 21). தந்தை, மகன் இருவரும் தச்சுவேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாண்டித்துரை என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்ற முத்துக்குமார் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வைரமுத்து மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது 4 பேர் கொண்ட கும்பல், முத்துக்குமாரை தாக்கி அவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றது தெரியவந்தது.

காயங்களுடன் பிணம்

எனவே தன் மகன் கடத்தப்பட்டது குறித்து வைரமுத்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தெற்கு ஆணைக்குட்டத்தில் உள்ள வெற்றிலையூரணி புதுக்கண்மாய் அருகில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்டு கிடந்தது முத்துக்குமார் என்று தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்