ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் - இன்று மாலை நிறைவடைகிறது

இன்று இரவு 8 மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு ஆதிபுரீஸ்வரர் சிலையில் வெள்ளிக்கவசம் மீண்டும் மூடப்படும்.;

Update:2025-12-06 10:30 IST

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மீதான வெள்ளிக்கவசம் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நள்ளிரவு 12 மணிவரை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களை அனுமதித்தனர்.

2-வது நாளான நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. பெரும்பாலான பக்தர்கள் கோவில் முன்பு விடிய, விடிய காத்திருந்து அதிகாலையிலேயே ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர்.

இன்று கடைசி நாள் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு, இரவு 8 மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு ஆதிபுரீஸ்வரர் சிலையில் வெள்ளிக்கவசம் மீண்டும் மூடப்படும். இந்த 3 நாட்களும் ஆதிபுரீஸ்வரருக்கு புனுகு சாம்பிராணி தைல அபிஷேகம், மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் பூஜை செய்யப்பட்ட புனுகு சாம்பிராணி தைலம் பிரசித்தி பெற்றது என்பதால் இந்த தைலம் அடங்கிய சிறிய டப்பாவை ரூ.20 கட்டணத்தில் கோவில் நிர்வாகமே விற்பனை செய்து வருகிறது. சிறப்பு வழியில் சென்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.25, ரூ.100 கட்டணங்களை கவுண்ட்டரில் செலுத்தி டோக்கன் பெற்று செல்லலாம். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் நற்சோனை உள்ளிட்ட ஊழியர்கள் செய்துள்ளனர்.

இதனால் திருவொற்றியூர் வரும் மெட்ரோ ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. திருவொற்றியூர் தேரடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்