விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது - செல்வப்பெருந்தகை
விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளே தமிழக அரசியல் களத்தை சுற்றி பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அதற்கு தமிழக அரசியல் களத்திற்கு புதிய வரவான த.வெ.க.வும். ஒரு காரணம். அந்தவகையில், ஆளும் கட்சியான தி.மு.க.வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்க தங்களது கூட்டணிகளை பலப்படுத்தும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஜய்யுடன், ராகுல்காந்தி தொலைபேசி உரையாடல், அதனை உறுதிப்படுத்தியது. இதனால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது. இதன்மூலம் த.வெ.க.வுடன் கூட்டணி என்ற தகவலுக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ், த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய்யை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. விஜய்யை சந்தித்து பேசியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். ராகுல்காந்திக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் விஜய்யை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது. திமுகவோடு காங்கிரஸ் ஐவர் குழு பேச்சு நடத்துவதுதான் எங்களுக்கு தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. பேசவும் சொல்லவில்லை.
இந்தியா கூட்டணியை சிதைக்க முடியாது; கூட்டணி வலுவாக உள்ளது; கூட்டணியை உடைக்க முடியாது. விஜய் - பிரவீன் சக்கரவத்தி சந்திப்பு குறித்து மேலிடத்திடம் பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.