வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனியார் எஸ்டேட் பாதுகாப்பு அதிகாரி கைது

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனியார் எஸ்டேட் பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-04 20:06 IST

வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனியார் எஸ்டேட் பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மதுபோதையில் வந்தார்

வால்பாறை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் நவரத்தினராஜன் வால்பாறை போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சம்பவத்தன்று இரவு வால்பாறை அருகில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் தொழில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் விவேக் (வயது 27) என்பவர் மதுபோதையில் சிகிச்சைக்காக வந்து உள்ளார். அப்போது அங்கு டாக்டர் மலர்க்கொடி, செவிலியர்கள் என மொத்தம் 3 மூன்று பேர் பணியில் இருந்து உள்ளனர். விவேக்கிடம் டாக்டர் நீங்கள் மது அருந்தியுள்ளீர்கள்.

பெண் செவிலியருக்கு தொல்லை

அதனால் பரிசோதனை செய்யமுடியாது. தற்போதைக்கு மாத்திரைகள் எழுதி தருகிறோம் என்று கூறி மாத்திரைகள் எழுதி கொடுத்துள்ளார். மாத்திரை சீட்டை வாங்கிய பணியில் இருந்த பெண் செவிலியர் ஒருவர் மாத்திரைகள் எடுக்கும் அறைக்கு சென்றுள்ளார். விவேக் செவிலியர் பின்னால் சென்று தடுத்து நிறுத்தி பணி செய்யவிடாமல் அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு டாக்டரும் மற்றொரு செவிலியரும் அங்கு சென்றனர். இதை பார்த்த விவேக், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். செவிலியரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கைது

புகாரை பெற்றுக்கொண்ட வால்பாறை போலீசார் உரிய விசாரணை நடத்தி செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றது, செவிலியரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.

பாதுகாப்பு இல்லை

இந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் மற்றும் பணியாளர்கள் கூறியதாவது:- வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இரவு காவலர் இல்லை. எங்களுக்கு பணி சமயத்தில் உரிய பாதுகாப்பு இல்லை. கண்காணிப்பு கேமராவும் கிடையாது. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தநிலைவயில் கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சந்திரா நேற்று வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும், அவர் தற்காலிகமாக வேறு ஆஸ்பத்திரியில் இருந்து இரவு காவலரை இன்றே நியமிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சிகிச்சையளிக்க வேண்டும். என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்