மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கடன்மேளா நடத்த வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கடன்மேளா நடத்த வேண்டும் என்று குறைதீர்வு முகாமில் கோரிக்கை வைத்தனர்.;

Update:2023-08-30 00:00 IST

குறைதீர்வு முகாம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். தனித்துணை கலெக்டர் தனஞ்செயன் (சமூக பாதுகாப்பு திட்டம்) முன்னிலை வகித்தார். பேச்சு பயிற்சியாளர் பிரபாகர், முடநீக்கியல் வல்லுனர் சுதாகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 40 பேருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் கடன்பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல சிக்கல்கள் உள்ளது. பலருக்கு கடன் கிடைப்பதில்லை. மாற்றுத்திறனாளிகளால் கடனை திரும்பி செலுத்த முடியாது என்ற மனப்பான்மை அதிகாரிகள் மத்தியில் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளவும். பலர் கடன்பெற்று திரும்ப செலுத்தி வருகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்தொடங்க கடன் வழங்குவதற்கான சிறப்பு கடன்மேளா நடத்தப்பட வேண்டும். போலி அடையாள அட்டைகளை களைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதுப்பிப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. அதை எளிமைப்படுத்த வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள்.

தொழிற்பயிற்சி மையம்

வேலூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை விரைந்து அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் பலர் வாழ்நாள் சான்று புதுப்பிக்காமல் உள்ளனர். அவ்வாறு புதுப்பித்தால் உதவித்தொகை நிறுத்தப்படாமல் தொடர்ந்து வழங்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் உரிய நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலேயே தங்களது சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாணை பெறப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அரசாணை வரப்பெற்றவுடன் உதவித்தொகை வழங்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்