குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த ஆசிரியை காவல்கரங்கள் அமைப்பினர் சென்னையில் மீட்டனர்

குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த 81 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியையை மீட்டு, காவல்கரங்கள் அமைப்பினர் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தனர்.

Update: 2023-09-26 04:23 GMT

மீட்கப்பட்ட அந்த ஆசிரியையின் பெயர் மெர்லின். அவருக்கு வயது 81. சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் திருவான்மியூர் கடற்கரை பகுதியில் சுற்றி திரிந்தார். இவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார். இவரது பேச்சை கேட்டு, திருவான்மியூர் கடற்கரை பகுதிக்கு வரும் பொதுமக்கள் இவருக்கு பண உதவி செய்தனர். அதில் சாப்பிட்டு, பிழைப்பு நடத்தி வந்தார்.

சமீபத்தில் ஆசிரியை மெர்லினிடம் கல்வி பயின்ற மாணவர் ஒருவர், இவரை அடையாளம் கண்டு பேசினார். இவர் எவ்வளவு பெரிய ஆசிரியர், இவரிடம் கல்வி பயின்ற எத்தனையோ மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இவரது நிலை இப்படி உள்ளதே? என்று ஆதங்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றை சமூகவலைதளத்தில் அந்த மாணவர் வெளியிட்டார். ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, தனது மகளுடன் ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்து வந்த மெர்லின், தனது மகளின் வாழ்வும் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவருக்கு பாரமாக இருக்க விரும்பாமல், வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மெர்லின் ஆசிரியையின் நிலை கண்டு, அவருக்கு உதவி செய்யும்படி, சென்னை போலீசில் செயல்படும் காவல்கரங்கள் அமைப்பிற்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் கரங்கள் அமைப்பின் இன்ஸ்பெக்டர் மேரிராஜூ தலைமையிலான போலீஸ் படையினர், ஆசிரியை மெர்லினின் மகள் டெய்சியை தேடிக்கண்டுபிடித்து சென்னை அழைத்து வந்தனர். மகளிடம், ஆசிரியை மெர்லின் நேற்று ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்