பைக்காரா படகு இல்லத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

பைக்காரா படகு இல்லம் அருகே வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான இடத்தினை அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.;

Update:2023-07-08 06:30 IST

ஊட்டி

பைக்காரா படகு இல்லம் அருகே வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான இடத்தினை அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

பைக்காரா படகு இல்லம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது பைக்காரா படகு இல்லம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் நிர்வகித்து வரும் இங்கு வழக்கமான நாட்களில் சுமார் 5000 பேரும் வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும் வருகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து படகு இல்லத்திற்கு செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. படகு இல்லம் செல்வதற்கு வனத்துறை மூலம் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக மோசமாக இருப்பதால் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென சுற்றுலா வாகன ஓட்டுநர்களும், சுற்றுலாப் பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தநிலையில் இசந்த சாலையை சீரமைக்க சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தற்போது ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. இதற்கிடையே தற்போது நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் தற்போது சாலை அமைக்கும் பணி துவங்க சிறிது காலதாமதமாகலாம். எனவே மழைக்காலம் முடிந்தவுடன் இந்த சாலையை உடனடியாக சீரமைத்துத் தரவேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் பைக்காராவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அதற்கான இடமும் தேர்வு தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆய்வு

இதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் யுவராஜ், தாசில்தார் மணிமேகலை ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் பைக்காரா படகு இல்லம் அருகே வாகன நிறுத்துமிடத்திற்கான இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக இடம் கேட்டு வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இடம் கிடைத்தவுடன் அதற்கான தொகை ஒதுக்கப்பட்டு, எத்தனை வாகனங்கள் நிறுத்தப்படும் என்பது உள்ளிட்ட பணிகள் 2-ம் கட்டமாக நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்