தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உலா வந்த காட்டு யானை
வால்பாறை அருகே தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.;
வால்பாறை,
வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் மற்றும் சிறுகுன்றா எஸ்டேட்டிற்கும் நடுவே நேற்று முன்தினம் இரவு காட்டு யானை முகாமிட்டது. நேற்று காலை சிறுகுன்றா எஸ்டேட் கீழ் பிரிவு மாட்டுப்பட்டி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு வழியாக வால்பாறை-சிங்கோனா சாலையில் நடந்து சென்றது. அங்கு நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பை காட்டு யானை லாவகமாக தாண்டி சென்றது. இதை பார்த்த குடியிருப்பு மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் சமயத்தில் ஒற்றை காட்டு யானை சாலையோர தடுப்பை தாண்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பலாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் எஸ்டேட் தொழிலாளர்களின் குடியிருப்பு அருகே தோட்டத்தில் உள்ள பலா பழங்களை உண்ண காட்டு யானைகள் உலா வருகிறது. எனவே, தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.