தலையில் பாறாங்கல்லை போட்டு பெண் கொடூர கொலை

பேரணாம்பட்டு அருகே தலையில் பாறாங்கல்லை போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-08-30 17:42 GMT

பேரணாம்பட்டு அருகே தலையில் பாறாங்கல்லை போட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு வீடு திரும்பவில்லை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அரவட்லா மலை பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு வள்ளியம்மாள் (வயது 60), முனியம்மாள் (55) என 2 மனைவிகள். இதில் முதல் மனைவியான வள்ளியம்மாளுக்கு தங்கராஜ், வடிவேல் ஆகிய 2 மகன்களும் தவமணி ஜெயலட்சுமி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவனை விட்டு பிரிந்த வள்ளியம்மாள் அதே கிராமத்தில் இளைய மகனான வடிவேல் வீட்டில் வசித்து ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாலையில் ஓட்டி கொண்டு தனது வீட்டில் இரவு பட்டியில் அடைத்து விட்டு சகோதரி மகள் லட்சுமி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு 10.30 மணி வரை பேசிய வள்ளியம்மாள் தனது வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சாலையோரம் உள்ள நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று காலை 6 மணியளவில் வள்ளியம்மாள் தலையில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த ஆடைகள் கலைந்து கிடந்தன.

போலீசார் விரைவு

அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்ரண்டு ராமமூர்த்தி மற்றும் பேரணாம்பட்டு போலீசார் விரைந்து சென்று வள்ளியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனநர்.

ஆனால் உடலை எடுக்கவிடாமல் அவரது குடும்பத்தினர் தடுத்து கொலையாளிகளை கைது செய்து விட்டு எடுத்து செல்லுங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 மணித்துக்கு பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் வள்ளியம்மாள் உடலை காலை 11.30 மணியளவில் போலிசார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ராஜேஷ் கண்ணன் சம்பவம் நடந்த இடத்தை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மோப்ப நாய்

திருவண்ணாமலையிலிருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு மோப்பம்பிடித்து சுமார் 200 மீட்டர் தூரம் ஓடிச் சென்று பாண்டு என்பவர் வீட்டு முன்பு சுற்றி, சுற்றி வந்து நின்றது. தடவியல் கைரேகை நிபுணர் ஜேம்ஸ் அந்தோணிராஜ் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார்.

இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து வள்ளியம்மாள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி கொலையாளியை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்