இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அன்புமணி மீது தேர்தல் ஆணையம், டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பு புகார்
விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்வதாக தேர்தல் ஆணையம், டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பு புகார் மனு அளித்துள்ளது. மேலும் பாமக பெயரையோ, கட்சியையோ அன்புமணி பயன்படுத்த உரிமை இல்லை என்றும் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
காற்றின் தரம் சென்னை கொடுங்கையூரில் 136ஆகவும், மணலியில் 128 ஆகவும், அரும்பாக்கத்தில் 124 ஆகவும், வேளச்சேரியில் 108 ஆகவும் உள்ளது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக்குறியீடு 219ஆக பதிவாகி உள்ளது.
காற்றின் தரம் மோசமாகி வருவதால் பொதுமக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் வரும் பிரதமர் மோடி... விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட திட்டம்?
பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தவெக வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் - வெளியான முக்கிய தகவல்
தவெக வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என்று தமிழக வெற்றிக் கழக தலைமை அறிவித்துள்ளது.
விடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தருமபுரியில் நடந்த திருமண நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடுதான் நம்பர் 1 மாநிலமாக உருவாகி இருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை. எத்தனையோ சோதனைகளை தாண்டி சாதனை படைத்திருக்கிறோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு கொண்டிருந்தது. தற்போது மேலும் 17 லட்சம் சகோதரிகளுக்கு அதாவது 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறோம். சில சகோதரிகள் விடுபட்டிருந்தால்... கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது என்ற பெருமை நமக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே - உதயநிதி
தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
ஒடிசா: வகுப்பில் துப்பாக்கியை நீட்டி தலைமை ஆசிரியரை மிரட்டிய 14 வயது மாணவன்
மாணவன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு செய்து வந்திருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இதனால், சிறுவனை அழைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்தம் போட்டுள்ளனர். அப்போது, அந்த சிறுவன் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி, சுட்டு விடுவேன் என தலைமை ஆசிரியரையே மிரட்டியிருக்கிறான்.
த.வெ.க. விருப்பமனு தேதியை விஜய் அறிவிப்பார்: செங்கோட்டையன் பேட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது என செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.
ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம்
ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
வகுப்பறையில் அமர்ந்து மது அருந்திய மாணவிகள்: ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.