காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

கோவை குற்றாலம் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.;

Update:2022-08-12 20:48 IST

பேரூர்

கோவை குற்றாலம் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

வனப்பகுதி

கோவையை அடுத்த சிறுவாணி மலை அடிவாரம் சாடிவயலை அடுத்த சீங்கம்பதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராள மான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வனப்பகுதி களில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இங்குள்ள காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து பயிர் களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் மனித- விலங்கு மோதல் ஏற்படுவதால் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்கின்றன.

தினக்கூலி தொழிலாளி

இந்நிலையில், சீங்கம்பதி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவர், தமிழக சுற்றுலா துறையில் வாட்ச்சராக, தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை 6.15 மணிக்கு, தனது வீட்டில் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார்.

அங்கு 200 மீட்டர் தூரத்தில் புதர் மறைவில் இருந்த காட்டு யானை ஒன்று திடீரென்று வெளியே வந்தது. அதை பார்த்ததும் முருகன் அதிர்ச்சி அடைந்தார்.உடனே அவர், யானையிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் காட்டு யானை அவரை விடாமல் துரத்தியது.

காட்டு யானை தாக்கியது

இதனால் தவறி விழுந்த முருகனின் இடது கணுக்கால் உடைந்தது. இதன் காரணமாக அவரால் ஓட முடிய வில்லை.

இதையடுத்து அவரை காட்டு யானை தாக்கியது. படுகாயம் அடைந்த முருகன் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார்.

அந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது.

இதைத்தொடர்ந்து அவர்கள், படுகாயம் அடைந்த முருகனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விசாரணை

அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, குருசித்தன் அளித்த புகாரின் பேரில், காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்