ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி: நாகப்பட்டினம் வாலிபர் கைது
தூத்துக்குடியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை கியூஆர் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது.;
தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை QR ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கியூஆர் கோடு (QR Code) ஸ்கேன் சாதனத்தை சோதனை செய்ததில் அதில் வேறொருவின் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் நேற்று முன்தினம் (22.12.2025) NCRP-ல் (National Cybercrime Reporting Portal) அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் மேற்சொன்ன கியூஆர் கோடு ஸ்டிக்கரின் வங்கி கணக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய செல்போன் எண்ணை கண்டுபிடித்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்தனர். இதில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் முருகானந்தம் (வயது 26) என்பதும், செல்போன் எண்ணின் இருப்பிடத்தை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ததில் அது தூத்துக்குடி பள்ளிவாசல் பஜார் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக நேற்று முன்தினம் போலீசார் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் ஓட்டலில் தனது வங்கி கணக்கின் கியூஆர் ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்று கியூஆர் கோடு மோசடியில் ஈடுபட்டுள்ளாரா எனவும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளில் உள்ள QR code-ஐ சோதனை செய்து இதுபோன்று மோசடி நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.