லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது
தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கவரட்டி தீவுப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த கடலோர காவல் படையினர் அவர்களை கைது செய்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தருவைகுளத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவு அருகே உள்ள கவரட்டி தீவுப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த கடலோர காவல் படையினர், மீனவர்களை கண்டதும் விரைந்து சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 4 படகுகளில் இருந்த தருவைகுளத்தை சேர்ந்த 30 மீனவர்களை அதிரடியாக கைது செய்தனர். படகுகளையும் பறிமுதல் செய்து லட்சத்தீவு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். லட்சத்தீவு பகுதியில் தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.