பல்வேறு நலத்திட்ட உதவிகள் சேவைகளை பெறுவதற்கு தனிமனித அடையாளமாக திகழ்வது ஆதார் அட்டை. கண்கருவிழி, கைரேகை, பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் அதில் அடங்கி உள்ளதால் போலிகளை தவிர்த்து தகுதி வாய்ந்த நபர்கள் பயனடைய முடிகிறது. இந்த சூழலில் ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு அதில் விவரங்கள் பதிவேற்றம் செய்த போது ஒரு சில குறைபாடுகள் ஏற்பட்டது. அது இன்றளவும் அரசு மற்றும் தனியார் இ- சேவை மையங்கள் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் நடைமுறை உள்ளதால் அதை பெறுவதற்காக அதிகாலை 5 மணியளவில் பொதுமக்கள் தபால் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு வருகை தர வேண்டி உள்ளது. இதனால் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ஆதார் அட்டையில் குறைபாடுகள் உள்ள விவரத்தை படித்தவர்கள் எளிதில் கண்டுபிடித்து அதை திருத்தி கொள்வார்கள். ஆனால் படிப்பறிவற்ற மூத்த குடிமக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் பிற சேவைகளை பெறுவதற்காக செல்லும் போது தான் தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து இ-சேவை மையங்களுக்கு சென்று புதுப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் உடுமலை தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் தபால் அலுவலகத்திற்கு குறைபாடுகளை புதுப்பிப்பதற்கு வந்து செல்கின்றோம். நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவதால் டோக்கன் முறை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. இதை பெறுவதற்காக அதிகாலை 5 மணியளவில் வருகை தந்து காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த முறை கிராமப்புற மூத்த குடிமக்களுக்கு சாதகமற்ற சூழலை ஏற்படுத்துகிறது. போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து உடுமலைக்கு வருகை தருவதற்குள் அங்கிருக்கும் பொதுமக்கள் டோக்கன் பெற்று சென்று விடுகின்றனர்.
இதை தவிர்க்கும் விதமாக அலுவலக வேலை நேரத்தில் அதற்கான தனியாக நேரம் ஒதுக்கி பொதுமக்களுக்கு டோக்கன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு பதாகையும் வைக்க வேண்டும்.அல்லது கிராமங்கள் தோறும் முகாம்கள் அமைத்து ஆதார் திருத்தத்தை மேற்கொள்ள முன்வரவேண்டும். இதனால் பொதுமக்களும் அவதிப்பட வேண்டிய சூழல் ஏற்படாது என்று தெரிவித்தனர்.