தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புகைப்பட கலைஞர் உள்பட 2 பேர் பலி
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புகைப்பட கலைஞர் உள்பட 2 பேர் பலியாகினர். நண்பர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
புகைப்பட கலைஞர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிகல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி மகன் நாகராஜ் (வயது 25). இவரும், நண்பர்களான அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் நாகேந்திரன், வெங்கடராமன் மகன் நாகராஜ் (26) ஆகிய 3 பேரும் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டையில் இருந்து தடிகல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே பெங்களூரு கோரமங்கலா பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ரைடரும், புகைப்பட கலைஞருமான நவ்ரோஸ் (80) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இதையடுத்து எதிர்பாராதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த தீர்த்தகிரி மகன் நாகராஜ், நவ்ரோஸ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த வெங்கடராமன் மகன் நாகராஜ், நாகேந்திரன் ஆகியோர் உயிருக்கு போராடினர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கெலமங்கலம் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.