செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொது மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-07-03 17:52 GMT

செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொது மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செறிவூட்டப்பட்ட அரிசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 1,650 நியாய விலைக் கடைகளும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 8 நியாய விலைக் கடைகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 3 நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,661 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றது.

இக் கடைகள் மூலம் ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 141 ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தகுதியின் அடிப்படையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றில் மத்திய அரசின் திட்டமான செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் நிலை 3-ன் படி நியாய விலைக் கடைகளில் பொது வினியோகத் திட்டம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்க்கு ஆணையிடப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்து வழங்கப்படுவதாக தவறாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.

கடும் நடவடிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் குறைபாடுகளை சரி செய்யும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் தாதுப்பொருட்களை ஈடு செய்யும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படுகிறது.

இவ்வாறு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவதால் அவ்வாறு வரும் தகவல்கள் தவறானதாகும்.

இது போன்று பொது மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் வழங்கும் விலையில்லா அரிசி மிகவும் தரமாகவும், செறிவூட்டப்பட்டும் வழங்கப்படுகிறது.

பிளாஸ்டிக் அரிசி மற்றும் எவ்வகையிலும் தரமற்ற அாிசியினை வழங்கவில்லை என்பதையும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் அரிசி கலந்து நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது போன்ற தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்