ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை

திருச்சி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற டீன் நேரு தெரிவித்தார்.

Update: 2022-06-14 19:11 GMT

திருச்சி, ஜூன்.15

திருச்சி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற டீன் நேரு தெரிவித்தார்.

அதிக முக்கியத்துவம்

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பதிலாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டீனாக இருந்த நேரு நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பொறுப்பேற்றார்.

நேற்று டீன் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவமனை வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படும். நோயாளிகளின் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சையின் போது ஏதாவது குறை இருந்தால் நோயாளிகளே என்னிடம் நேரில் தெரிவிக்கலாம்.

அறிவுறுத்தப்படும்

நோயாளிகள் மற்றும் உடன் தங்கியிருப்பவர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படும். மருத்துவமனை வளாகத்தில் இயங்காமல் இருக்கும் 3 லிப்டுகள் உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நான் ஏற்கனவே இதே மருத்துவமனையில் பணியாற்றினேன். என்னுடன் பணியாற்றியவர்கள் தற்போதும் பணியில் உள்ளனர். இதனால் ஒருங்கிணைந்து மக்கள் சேவையை சிறப்பாக ஈடுபடமுடியும்.

மருத்துவ சேவை என்பது மிகவும் உயர்வானது. நோயாளிகளை மிகவும் மதித்து நடக்க வேண்டும் என்று அனைத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் உடனிருந்தார். முன்னதாக புதிதாக பொறுப்பேற்ற டீனுக்கு திருச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்