அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை

அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-20 21:52 GMT

முன் அனுமதி

பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முறையாக முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறாமல் பதாகைகள் வைக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள், விளம்பர பதாகை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.

2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35-ன் படியும், திருத்தப்பட்ட 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படியும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது.

அகற்றப்பட வேண்டும்

இச்சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 17-0-ன்படி அகற்றப்பட வேண்டும். அதேபோல் உரிமக்காலம் முடிந்த பின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-பி-ன்படி அகற்றப்பட வேண்டும்.

மேற்படி பிரிவுகள் 117-0, 117-பி ஆகியவற்றின்படி, விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்ற தவறினால் அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றிவிடும். பின்பு அதற்கான செலவினம் பிரிவுகள் 117-0, 117-பி மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

அபராதம்

மேற்கூறிய விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது 3 வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனிநபர் நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விதிகள் 322, 341-ல் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். மேலும் உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்