அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
ஈரோடு
அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
ஒற்றை தலைமை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு கட்சியின் ஒருங ்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள். கட்சி தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடும்போது 2 பேரும் இணைந்தே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை வேண்டும் என்கிற முழக்கம் கட்சி தொண்டர்களிடம் இருந்து வெளிவந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. ஒற்றை தலைமை என்றால், யாருக்கு கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவிப்பார்கள்? யாருக்கு எதிர்ப்பு அதிகமாக காணப்படும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
போஸ்டர்கள்
கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த போஸ்டர்கள் கலாசாரம் ஈரோட்டிலும் எதிரொலித்து உள்ளது. ஈரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த போஸ்டரில் வித்தியாசமான வாசகங்களும் இடம்பெற்று உள்ளன. தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் "ஒற்றை தலைமையில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம்" என்றும், "இரட்டை இலை சின்னத்தை இழந்தால் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்கள் தான்" என்றும் வாசகங்கள் உள்ளன. இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
தீர்மானம்
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் தலைமையை ஏற்க வேண்டும் என்று அந்த கட்சியின் கிளை அமைப்புகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாநில செயலாளர் பி.மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.ஈஸ்வரமூர்த்தி, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.கிஷோர் குமார், பிரதிநிதி கே.ஏ.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஏ.தனபால், ராஜேந்திரன், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.