அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் தர்ணா

போடி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்று புகார் கூறினர்.;

Update:2023-05-09 00:30 IST

நகராட்சி கூட்டம்

போடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) செல்வராணி, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினர். அதற்கு ஆணையர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கவுன்சிலர்கள் தர்ணா

அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் எழுந்து அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் நிறைவேற்றவில்லை என்று கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி கூட்டரங்கின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நகராட்சி அலுவலகம் வெளியே நின்று அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு நகராட்சி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்