ஈரோட்டில் துணிகரம்: ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோட்டில் ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகையை துணிகரமாக திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-11 20:56 GMT

ஈரோட்டில் ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகையை துணிகரமாக திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

ஈரோடு திண்டல் தெற்குப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (வயது 47). இவருடைய கணவர் லட்சுமி நாராயணன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன் ஹரிஷ். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீவித்யா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவித்யா, தனது மகனுடன் உறவினர் வீட்டு திருமணத்துக்காக சென்னைக்கு சென்று விட்டார். திருமணம் முடிந்து நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்தார். பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பீரோ வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து ஸ்ரீவித்யா ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்புற கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

வலைவீச்சு

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்ம நபர்கள் வைர நகை மற்றும் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர். அதன் தொடர்ச்சியாக ஆசிரியை வீட்டிலும் பணம்- நகை திருட்டு போன சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்