கல்வியுடன் பண்பாடு, ஒழுக்கத்தைமாணவர்களுக்கு கற்று தரவேண்டும்ஆசிரியர்களுக்கு, அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுரை

கல்வியுடன் பண்பாடு, ஒழுக்கத்தை மாணவர்களுக்கு கற்று தரவேண்டும் என ஆசிரியர்களுக்கு, அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினார்.

Update: 2023-09-26 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாடு, ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்று தர வேண்டும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா நடந்தது. கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன், ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய 292 ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம், வெள்ளி காசுகளை வழங்கி பேசியதாவது:-

நல்லாசிரியர் விருது

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி, ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் மாநில அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் சிறப்பாக பணிபுரிந்த 292 ஆசிரியர்களுக்கு கேடயங்கள் மற்றும் வெள்ளி காசுகள் பெற்றோர் ஆசிரிய கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

அறநெறி, ஒழுக்கம்

தாய், தந்தைக்கு அடுத்து மூன்றாவதாக இடத்தில் வைத்து வணங்க கூடியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.

கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும், அறநெறிகளையும், ஒழுக்கத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்திற்கு கற்று தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்களை அறிந்து அவற்றில் வெற்றி பெற ஊக்கப்படுத்த வேண்டும். அதேப்போல மாணவர்களும் நன்றாக படித்து உயர்நிலைக்கு சென்று தான் படித்த பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய அடையாள அட்டை

முன்னதாக கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட 21 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சக்கர நாற்காலிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஆனந்தன், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் நவாப், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்