தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு 2029-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்படும் மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு 2029-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி அளித்த பேட்டியில் தொிவித்தாா்.;
தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு 2029-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்படும் என சென்னிமலையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
சென்னிமலை கோவிலுக்கு...
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு நேற்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் வந்தார். அவருக்கு கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர்.
அவருடன் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சரஸ்வதி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் கிஷோர் ஆகியோரும் உடன் வந்தனர். மூலவர் சன்னதிக்கு சென்று எல்.முருகன் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
வெற்றிவேல் யாத்திரை
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கந்த சஷ்டி கவசத்தை அவமரியாதை செய்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மிகப்பெரிய வெற்றிவேல் யாத்திரையை நடத்தியதால் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது சென்னிமலை முருகன் கோவில் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
சனாதனம்
சனாதனத்தை ஒழிப்போம் என்று தற்போது மகாராஜாக்கள், இளவரசர்கள் பேசி வருகிறார்கள். இந்த தேசத்தின் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு காரணம் சனாதனம் தான்.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு ஒரு தமிழக மீனவர்கள் மீது கூட துப்பாக்கி சூடு நடைபெறவில்லை. மீனவர்கள் எல்லை தாண்டி போகும் போது மட்டும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுகிறது. குஜராத் மாடல் என்பது அங்கு பால் விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கு தருகிறார்கள். ஆனால் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு துரோகம் செய்கிறது.
2029-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்படும்
பெண்களுக்கான 33 சதவீத இட ஓதுக்கீடு என்பது தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் 2029-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்பார்.
இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
'ஜெய்ஸ்ரீராம்'
மேலும் மத்திய மந்திரி எல்.முருகனிடம் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய ரசிகர்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என கூறியது குறித்து கேட்டபோது, 'அதற்கு என்னுடைய பதில் ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம், ெஜய்ஸ்ரீராம்,' என தெரிவித்தபடி அங்கிருந்து சென்றார்.
பேட்டியின்போது திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மங்களம் ரவி, வடுகநாதன், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் வேதானந்தம், குரு குணசேகரன், ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் ஜெகதீசன், சென்னிமலை ஒன்றிய நிர்வாகிகள் சந்திரசேகர், சுந்தர்ராசு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.