அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா

தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-10-24 20:30 GMT

அம்மன் உத்தரவு

தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடத்துவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி அம்மனின் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லி சத்தமிடுதல் மூலம் சகுனம் வழியாக அம்மனின் உத்தரவு கிடைத்ததால் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 15-ந்தேதி இரவு 10 மணிக்கு நடந்தது. மறுநாள் அதிகாலையில் திருவிழா சாட்டுதல் பெற்று வாணவேடிக்கையுடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவைெயாட்டி காப்பு கட்டிக் கொண்டனர். விழாவில் ஒவ்வொரு நாள் மாலையும் அம்மனின் பண்டார பெட்டி மற்றும் உற்சவர் மண்டபத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவில் கலைநிகழ்ச்சிகளும், நாடகங்களும் நடைபெற்றன.

கண் திறப்பு வைபவம்

கண் திறப்பு வைபவமே இத்திருவிழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. விழாவில் நேற்று முன்தினம் அம்மனின் கண் திறப்பு வைபவம் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. கண் திறப்பினை தொடர்ந்து அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி அம்மன் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் புஷ்ப விமானத்தில் அம்மன் உலா வந்து வாண காட்சி மண்டபத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து விடிய, விடிய வாண வேடிக்கைகள் நடைபெற்றன. விழாவில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டார்.

சொருக்கு பட்டை சப்பரம்

நேற்று பகல் 1.30 மணிக்கு சொருகு பட்டை சப்பரத்தில் அம்மன் உலா வந்து பல்வேறு மண்டகபடிகளில் இறங்கி அருள் பாலித்து பூஞ்சோலைக்கு எழுந்தருளினார். விழாவில் வேடசந்தூர் காந்திராஜன் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் ஜெயன், தி.மு.க. பிரமுகர் அம்பை ரவி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான அகரம் சக்திவேல், துணை செயலாளர் முருகேசன், அருணா சேம்பர் மணிகண்டன், கார்த்திக், தொழில் அதிபர்கள் மூர்த்தி அய்யப்பன், சந்திரமவுலி, ஜே.எஸ்.ஆர்.ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஸ்ரீதர், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், அகரம் மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சிகளின் வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகள்

திருவிழா ஏற்பாடுகளை அகரம் முத்தாலம்மன் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள், தொழில் அதிபர் மேகநாதன் ஆகியோர் செய்து இருந்தனர். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை அகரம் மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சிகளின் தலைவர்கள் மணி என்ற நந்தகோபால், கவிதா சின்னத்தம்பி, துணைத் தலைவர்கள் ஜெயபால், நாகப்பன், செயல் அலுவலர்கள் சூசை இன்பராஜ், சந்தனம்மாள் ஆகியோர் மேற்பார்வையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்