அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-07-16 17:03 GMT

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதிஅணை கட்டப்பட்டு உள்ளது.தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு

இந்த சூழலில் அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைவதற்குள் குறைந்துவிட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இந்த சூழலில் சமவெளி பகுதியில் நிலவி வருகின்ற வறட்சியின் காரணமாக தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அத்துடன் ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் உள்ளது. இதன் காரணமாக கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

விவசாயிகள் கவலை

அதைத் தொடர்ந்து கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உயிர் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் ஆறு மற்றும் பிரதான கால்வாயின் மூலமாக உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் போதிய மழைப்பொழிவு இல்லாததால் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து கவலையுடன் காத்து உள்ளனர். நேற்றுகாலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையின் அடி 46.72 உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 278 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்