பாம்புக்கு ஆசைப்பட்டு உயிரை பறிகொடுத்த கழுகு

Update: 2023-02-06 19:30 GMT

சேலம் மாவட்டம் தேவூர் அருகே மேட்டாங்காடு பகுதியில் நேற்று கழுகு ஒன்று நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயலில் இருந்து பாம்பு ஒன்றை கவ்விக்கொண்டு உயர பறந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள மின்மாற்றியின் (டிரான்ஸ்பார்மர்) ஒயரில் கழுகின் வாயில் சிக்கி இருந்த பாம்புவின் உடல் சிக்கி மின்சாரம் தாக்கியது. இதில் மின்சாரம் பாம்பு மற்றும் கழுகு மீது பரவி தாக்கியதில் இரண்டுமே கண்ணிமைக்கும் நேரத்தில் இறந்து விட்டன. பாம்புக்கு ஆசைப்பட்டு உயிரை பறிகொடுத்த கழுகும் இறந்த தகவல் அறிந்து சேலம் சேர்வராயன் தெற்கு வனத்துறை அலுவலர் முத்துராஜ் அங்கு விரைந்து வந்தார்.

இதையடுத்து கோனேரிப்பட்டி மின்சார வாரிய உதவி பொறியாளர் தங்கராசு உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்தனர். அவர்கள் மின்சார இணைப்பை துண்டித்து டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த பாம்பு மற்றும் கழுகின் உடல்களை மீட்டு அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருந்தக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி மருத்துவர் சுரேஷ் பரிசோதனை செய்த பிறகு அவற்றை வனத்துறையினா் புதைத்து விட்டனர். நெல் வயல்களில் எலியை பிடிக்க செல்லும் பாம்பை கழுகு தூக்கிச்சென்ற நிலையில் அவை இரண்டும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தை பற்றி அந்த பகுதி விவசாயிகள் சோகத்துடன் பேசிக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்