சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
சிதம்பரம்:
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் பால், நெய்வேத்திய பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது.
கொடியேற்றம்
பின்னர் யாகசாலையில் இருந்து உற்சவ கொடியை எடுத்து வந்து நடராஜ சன்னதியில் வைத்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் காலை 6.50 மணிக்கு பஞ்ச மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவகாமசுந்தரி, முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவசிவ கோஷத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் பஞ்சமூர்த்திகள் உள்பிரகாரத்தில் வீதி உலா வந்தனர்.
போலீஸ் குவிப்பு
கொடியேற்றத்தை முன்னிட்டு சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
விழாவில் நாளை(செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் வீதியுலாவும், நாளை மறுநாள்(புதன்கிழமை) தங்க சூரிய பிறை வாகனத்தில் வீதியுலாவும், வியாழக்கிழமை)வெள்ளி பூதவாகனத்தில் வீதியுலாவும் என்று தினமும் வெவ்வேறு வாகனத்தில் சாமி வீதியுலாவும் நடக்கிறது.
6-ந் தேதி தரிசனம்
விழாவில் வருகிற 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், வருகிற 5-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டமும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு ஆனித்திருமஞ்சன தரிசனமும், வருகிற 7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.