அண்ணாவின் கொள்கைகளை திமுக குழிதோண்டி புதைத்து வருகிறது - ஜெயக்குமார் விமர்சனம்
சாதி ரீதியாகவோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ அரசியல் செய்வதை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.;
சென்னை,
ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலும், கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் இதயங்களிலும் அவர் வாழ்ந்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலகடத்தில் தமிழகத்தின் பல முக்கிய மாநில உரிமைகள் தாரைவார்க்கப்பட்டன. காவிரி நதிநீர் விவகாரமாக இருந்தாலும் சரி, முல்லை பெரியா அணை பிரச்சினையாக இருந்தாலும் சரி பறிபோன அந்த உரிமைகளுக்கு துணிச்சலாக குரல் கொடுத்து அவற்றை மீட்டெடுத்து காட்டியவர் ஜெயலலிதா.
அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் திமுக. அண்ணாவின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து வருகிறது. அ.தி.மு.க. சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு என்பது காலம் காலமாக உள்ள மரபுகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சொன்னேனே தவிர நான் எந்த கருத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுச்செயலாளர் ஒரு கருத்தை சொன்ன பிறகு அந்த கருத்தை தான் நானும் சொல்ல முடியும். சாதி ரீதியாகவோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ அரசியல் செய்வதை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது. திருப்பரங்குன்றம் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.
யார் போய் டெல்லியில் சென்று காலில் விழுந்தது. தி.மு.க.வை பொறுத்தவரையில் இன்றும் பா.ஜனதாவுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் பேசி வருகிறார்கள். தி.மு.க. எப்போதும் இரட்டை நிலைப்பாட்டுடன், இரட்டை குதிரையில் சவாரி செய்யும். இதை பா.ஜனதாவை விமர்சனம் செய்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.