4 வகையான அரசியலை அகற்றும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை

சாதிய அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனமான அரசியல், லஞ்ச அரசியல் என 4 வகையான அரசியலை அகற்றும் நேரம் வந்துவிட்டது என்று அண்ணாமலை கூறினார்.

Update: 2024-01-31 22:45 GMT

திருவண்ணாமலை,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை நேற்று 2-வது நாளாக மேற்கொண்டார். செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் நேற்று நடைபயணம் செய்தார்.

செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே அண்ணாமலை பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை மிகுந்த எழுச்சியுடன் உள்ளது. தமிழகத்தில் சாதிய அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனமான அரசியல், லஞ்ச அரசியல் என 4 வகையான அரசியல்கள் நடந்து வருகின்றன. அவற்றை மக்கள் அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அரசு பணியில் உள்ளவர்கள் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் அவர்களது வேலை பறிக்கப்பட்டு சம்பளம் நிறுத்தப்படும். ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி 230 நாட்களாக சிறையில் உள்ளார். அவருக்கு மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வழங்கி வரும் தி.மு.க. அரசை உடனடியாக நீக்கவும், 2024-ல் மீண்டும் பாரத பிரதமர் மோடி ஆட்சியில் அமரவும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடைபயணத்தின் முடிவாக திருப்பத்தூர் பஸ் நிலையத்தின் அருகே வேனில் நின்றவாறு பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்து வந்தவுடன் அவர் சென்று வந்த முழுவிவரத்தையும் தெரிவிப்பதுடன், தி.மு.க.வின் 4-வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்