ஊட்டியில் பழங்கால வாகன கண்காட்சி

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், ஊட்டியில் பழங்கால வாகன கண்காட்சி நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Update: 2023-10-08 22:15 GMT

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், ஊட்டியில் பழங்கால வாகன கண்காட்சி நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

பழங்கால வாகன கண்காட்சி

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், 'கார் டிரைவ்-2023' என்ற பழங்கால வாகன அணிவகுப்பு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதனை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் தலைவர் பால்ராஜ் வாசுதேவன், செயலாளர் எம்.எஸ்.குகன், பொருளாளர் விஜி ஜோசப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் நேற்று ஊட்டியில் பழங்கால வாகன கண்காட்சி நடந்தது. இதில் 35 கார்கள், 10 இருசக்கர வாகனங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் ரோல்ஸ் ராய்ஸ், பியட், ஆஸ்டின், மெர்சிடஸ் பென்ஸ், ஜாக்குவார், போர்டு உள்பட பல்வேறு பிரபல நிறுவனங்களின் கார்கள் கண்காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

கண்காட்சியில் இடம்பெற்ற கார்கள், இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து நேற்று மாலையுடன் பழங்கால வாகன கண்காட்சி முடிவடைந்தது. இந்த வாகனங்கள் இன்று (திங்கட்கிழமை) ஊட்டியில் இருந்து கர்நாடகா மற்றும் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வியந்து பார்த்தோம்

ஊட்டியில் பழங்கால வாகன கண்காட்சியை பார்வையிட்டவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

சென்னையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஸ்னோவினா-ஸ்னோவினி:-

நாங்கள் ஊட்டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறோம். ஊட்டியில் நேற்று முன்தினம் பழங்கால வாகன அணிவகுப்பு நடந்தது குறித்து தெரிந்துகொண்டோம். இதனால் இன்று (அதாவது நேற்று) நடந்த கண்காட்சியை நேரில் பார்க்க ஆர்வமாக வந்தோம். பழங்கால வாகனங்களை பார்த்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பழமையான விஷயங்கள் எப்போதும் மதிப்பு மிக்கவை ஆகும்.

ஊட்டியை சேர்ந்த கார்த்திகேயன்-சூர்யா தம்பதி:-

நாங்கள் வெளியே செல்லும்போது சாலையில் வித்தியாசமாக ஏதாவது ஒரு விஷயம் கண்ணில் பட்டால் கூட வாகனத்தை நிறுத்தி பார்ப்போம். ஒரே இடத்தில் பழமையான வாகனங்கள் இவ்வளவு இருப்பது பிரமிப்பை தருகிறது. பழங்கால வாகனங்களில் தொழில்நுட்பத்தை 50 வருடங்களுக்கு முன்பே சிறப்பாக கையாண்டு உள்ளனர் என்று நினைக்கையில் வியப்பு அளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்