கொடுமணலில் புதர்களுக்குள் மறையும் தொல்லியல் அடையாளங்கள்- பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கொடுமணலில் உள்ள தொல்லியல் சின்னங்கள் புதர்களுக்குள் மறைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;

Update:2023-10-04 04:52 IST

கொடுமணலில் உள்ள தொல்லியல் சின்னங்கள் புதர்களுக்குள் மறைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொடுமணல்

சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் பகுதி வரலாற்று சிறப்புமிக்கதாகும். இங்குள்ள பாண்டியன்காடு என்ற இடம் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து, அழிந்துபோன பகுதியாகும். இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்து உள்ளனர்.

வாழ்விடம் தனியாகவும், ஈமக்காடு தனியாகவும் இங்கு உள்ளது. இதில் மிகப்பெரிய கல்பலகை கல்லறை ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாண்டியன்காடு சாலையை ஒட்டி இருக்கும் இந்த கல் பலகைகள் வித்தியாசமாக உள்ளது. இங்கு வரும் தொல்லியல் ஆய்வாளர்களை வரவேற்கும் வகையில் இருக்கும் இந்த கல்லறை பகுதி பாதுகாக்கப்பட்ட சின்னம் என்று தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

அழியும் நிலையில்...

ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லாமல் புதர் மண்டி அழியும் நிலையில் இது உள்ளது. அழிந்து மறைந்து போன தொல்லியல் சின்னங்களை எத்தனையோ ஆய்வாளர்கள் பாடுபட்டு கண்டறிந்து இந்த உலகத்துக்கு வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் மீண்டும் அது மறையும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது தொல்லியல் ஆர்வலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் ஆய்வு நடந்த பகுதிகளிலும் புதர் மண்டி, ஆய்வு நடந்ததற்கான தடயங்கள் இல்லாமல் மறைந்து கிடக்கிறது.

புலவர் ராசு அருங்காட்சியகம்

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-

கொடுமணல் நாகரிகம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்தது என்பதை வெளியில் கொண்டு வந்தவர்களில் நமது ஈரோட்டை சேர்ந்த கல்வெட்டு அறிஞர் மறைந்த புலவர் செ.ராசு-க்கு முக்கிய பங்கு உண்டு.

வருங்காலத்தில் தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நடைபெறவும், மாணவ-மாணவிகள் சென்று பார்க்கும் வகையிலும் அங்கேயே புலவர் செ.ராசு பெயரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். முன்னதாக தொல்லியல் சின்னங்கள் புதர்களில் மண்டி வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகழ்வாராய்ச்சி நிறுத்தம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆய்வாளர் ரஞ்சித் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நமது பண்பாட்டை மீட்டெடுக்கும் வகையிலும், நமது பண்டைய நாகரிகத்தை வெளிக்கொண்டு வரும் வகையிலும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கொடுமணலில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் ஏராளமான புதிய தகவல்கள் கிடைத்தாலும், அதில் முன்னேற்றம் இல்லாத சூழல் இருக்கிறது. எனவே தற்போது இங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக எப்போது அகழ்வாராய்ச்சி நடைபெறும் என்பது அரசின் முடிவில்தான் இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்