விஜயின் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி.. நிற்காமல் வேகமாகச் சென்ற விஜய்
பனையூர் தவெக அலுவலகத்தின் முன்பு விஜய் காரை மறித்த அக்கட்சி பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னை,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அஜிதா ஆக்னல் கண்ணீருடன் அலுவலக வளாகத்தில் காத்திருந்தபோது, தவெக தலைவர் விஜயை சந்திக்க முயன்றார். ஆனால், அலுவலக பாதுகாப்பு ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் வளாகத்தில் தொடர்ந்து காத்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் ஆதரவாளர்களுடன் வந்திருந்ததால் அலுவலகத்தைச் சுற்றி பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பொறுப்புகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாலர்கள் ஆவேசம் அடைந்தனர். அஜிதா தனது ஆதரவாளர்களுடன் காரை மறித்தபோது நிற்காமல் வேகமாகச் சென்றது விஜய் கார்.
தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களின் புதிய நிர்வாகிகளை சந்திக்க விஜய் வந்தபோது முற்றுகையில் ஈடுபட்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்திற்குள் அஜிதாவை நுழையவிடாமல் தவெக பவுன்சர்கள் காலையில் தடுத்து நிறுத்தியிருந்தனர். மாநில பொறுப்பு கிடைக்காத அதிருப்தியில் அஜிதா முற்றுகை என தகவல் வெளியாகி உள்ளது.