தி.மு.க. அரசைக் கண்டித்து நேற்று மடத்துக்குளம் நால்ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போலி மதுபானம்
ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச்செயலாளரும், மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் அதிகாலை முதலே போலி மதுபானங்கள், கள்ளச்சாராயம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு தவிக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.
சட்டம்-ஒழுங்கு
கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்டவற்றைக்கட்டுப்படுத்த முடியாத நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.
எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் எடப்பாடியாரின் பின்னால் ஒன்று திரண்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசை தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, போதைப் பொருள் புழக்கம், கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், பேரூர் கழக செயலாளர் என்.டி.பி.செல்வராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.