செல்போனில் படம் எடுத்துஇளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவர் கைது

Update:2023-08-15 00:30 IST

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே இளம்பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஆபாசமாக

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பல இளம்பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து அதனை ஆபாசமாக 'மார்பிங்' செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா (32) என்பவர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரணை நடத்தி முருகேசனை கைது செய்தார்.

ஆர்ப்பாட்டம்

இது ஒருபுறம் இருக்க வீ.மேட்டூர் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று போலீஸ் நிலையத்தில் திரண்டனர். பின்னர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட முருகேசனை போச்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டத்திற்கு உட்பட்டு முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்