திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திட்டக்குடி கோர விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த கோர விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில், பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.