ஈரோட்டில் அண்ணன்- தம்பி இரட்டை கொலை வழக்கில் தாய் மாமா உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் அண்ணன்-தம்பி இரட்டை கொலை வழக்கில் தாய் மாமா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-31 20:49 GMT

ஈரோட்டில் அண்ணன்-தம்பி இரட்டை கொலை வழக்கில் தாய் மாமா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணன்-தம்பி

ஈரோடு முனிசிபல்காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 54). இவருடைய மனைவி மகேஸ்வரி (49). இவர்களுக்கு கவுதம் (30), கார்த்தி (26) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் செக் எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் ஆகியவற்றை வீட்டில் இருந்தே வியாபாரம் செய்து வந்தனர். கவுதமுக்கு திருமணமாகி ரூபினி என்ற மனைவி உள்ளார். கார்த்திக்கிற்கு திருமணம் ஆகவில்லை. கார்த்தி நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளராக பதவியில் இருந்தார்.

கவுதம், கார்த்தி ஆகியோர் படிப்பு செலவுக்காக அவர்களது தாய் மகேஸ்வரி பரம்பரை சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து உள்ளனர். படிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் சொத்து மீட்கப்படவில்லை. இதற்கிடையே மகேஸ்வரியின் தம்பியான நிதி நிறுவன தொழில் செய்துவரும் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமி (48) அடமானம் வைத்த பரம்பரை சொத்தை மீட்டு பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனால் ஆறுமுகசாமிக்கும், மகேஸ்வரியின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கத்திக்குத்து

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகசாமி தனது அக்காள் மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அவருடன் அண்ணன் ஈஸ்வரனின் மகனான ஈரோடு எல்லப்பாளையத்தை சேர்ந்த கவின் (24) என்பவரும் உடனிருந்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த கார்த்தி, கவுதம் ஆகியோருக்கும், ஆறுமுகசாமி, கவின் ஆகியோருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அதை கார்த்தி தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவுதம், கார்த்தி ஆகியோரை சரமாரியாக குத்தினார். இதில், அண்ணன்-தம்பி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதையடுத்து ஆறுமுகசாமியும், அவருடன் இருந்த கவினும் அங்கிருந்து தப்பி சென்றார்கள்.

2 பேர் கைது

உயிருக்கு போராடி கொண்டு இருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகசாமி, கவின் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். இதில் கவின் ஈரோட்டில் உள்ள ஒரு கார் ஷோரூமில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்