பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா

Update: 2022-11-30 18:45 GMT

பொள்ளாச்சி

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. போட்டியை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) வள்ளியம்மாள் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக மாணவி தர்ஷனா வரவேற்று பேசினார். 27 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இசை, நடனம், நாடகம், நடனம், தனிநபர் நடிப்பு, பலகுரல் பேச்சு என பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, பெண் கல்வியின் முக்கியத்துவம், மரங்களை வெட்டாமல் பசுமையை போற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நாடகம் நடித்து காண்பித்தனர். இதை தொடர்ந்து அரசு வழங்கும் விலையில்லா பொருட்களால் கல்விக்கண் திறக்கப்படுவது குறித்தும் மாணவ-மாணவிகள் நடித்து காண்பித்து அசத்தினர். பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒன்றிய போட்டிகளில் கலந்துகொண்டனர். இன்று (வியாழக்கிழமை) 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் கவின்கலை நுண் கலை மற்றும் மொழித்திறன் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தொடக்க விழாவில் வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சர்மிளா, யோகேஷ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சொப்னா, கோவை மாவட்ட துணை ஆய்வாளர் ஜெயசந்திரன், பொள்ளாச்சி கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்