பத்மநாபபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகளின் வருகையால் பத்மநாபபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-21 18:45 GMT

 தக்கலை

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் மன்னர்கள் வாழ்ந்த பிரமாண்டமான அரண்மனை உள்ளது. 3½ ஏக்கர் நிலப்பரப்பில் 27 கட்டிடங்கள் ஒருங்கிணைந்த இந்த அரண்மனை பழங்காலத்து ஓட்டு கூரையால், கலைநயமிக்க சிற்பங்களுடன், சித்திரவேலைபாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட பலமடங்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் பத்மநாபபுரத்தில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் வாகனங்களை பார்கிங் செய்ய போதிய இடவசதிகள் இருந்தாலும், அவற்றை ஒழுங்குபடுத்த யாரும் இல்லாததாலும் மக்கள் வசிக்கும் தெருக்களில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்றனர். இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதுபோல் தக்கலை-குலசேகரம் சாலையில் இருந்து பத்மநாபபுரத்திற்கு செல்லும் சாலை மிக குறுகலாக இருப்பதால் ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா வாகனங்களின் வருகையால் தக்கலை-குலசேகரம் சாலை வழியாக அரசு பஸ்கள், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதே நிலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆகவே போக்குவரத்து நெருக்கடியை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்