தேனி டாஸ்மாக் அலுவலகத்தில்ஊழியர்கள் தர்ணா :பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்

தேனி டாஸ்மாக் அலுவலகத்தில், ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் பெயரை சொல்லி பணம் கேட்டு சிலர் மிரட்டுவதாக அவர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

Update: 2023-04-24 18:45 GMT

டாஸ்மாக் ஊழியர்கள் புகார்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமையில், டாஸ்மாக் ஊழியர்கள் பலர் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமைச்சர் ஒருவரின் பெயரை தவறாக பயன்படுத்திக் கொண்டு சிலர், டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொகையில் சதவீத அடிப்படையில் பணம் கேட்டு ஊழியர்களை மிரட்டுகின்றனர். டாஸ்மாக் அதிகாரிகளை மிரட்டி எந்தவித உத்தரவும் இல்லாமல், பணம் கொடுக்காத கடைகளை அடைக்கச் சொல்கின்றனர்.

சட்டவிரோத மதுபானக்கூடம்

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான மதுக்கடைகளில் மதுபானக் கூடங்கள் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்திக் கொண்டு, கட்டிட உரிமையாளர் அல்லது மதுபானக் கூடம் நடத்துவோரிடம் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர். டாஸ்மாக் குடோனில் இருந்து வரக்கூடிய மதுபான பெட்டிக்கு, ஒரு பெட்டிக்கு ரூ.12 வீதம் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர்.

இத்தகைய நபர்கள் மீது உரிய விசாரணை செய்து, டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்குமாறும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படாதவாறும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.

தர்ணா போராட்டம்

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில், கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மனு கொடுக்கச் சென்ற டாஸ்மாக் ஊழியர்கள் அந்த அலுவலகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் மாவட்ட மேலாளர் தனலட்சுமி அங்கு வந்தார். போராட்டம் நடத்தியவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் தங்களின் புகார் மனுவை, மாவட்ட மேலாளரிடமும் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்