பாலாற்றில் மணல் எடுப்பதை கண்டித்து சாலை மறியல் செய்ய முயற்சி
அம்முண்டி பகுதியில் பாலாற்றில் மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சிசெய்தனர்.;
கார்ணம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் அம்முண்டி எல்லையில் பாலாற்றில் இருந்து மணல் எடுத்துள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று அம்முண்டி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட பொதுமக்கள் திரண்டனர். இதனையடுத்து காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், திருவலம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காரணம்பட்டு எல்லையை மீறி அம்முண்டி பகுதியில் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தப்படும் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.