கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-07-28 18:45 GMT

கடையநல்லூர்:

உலக புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு கடையநல்லூர் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கிய பேரணி கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது, முன்னதாக புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவிகள் புலிகள் வேடம் அணிந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரத்னா உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டு புலிகளின் முக்கியத்துவம், வனப் பாதுகாப்பின் அவசியம், மரம் நடுதலின் அவசியம் பற்றிய பதாகைகள் ஏந்தியும், புலிகள் போல் வேடம் அணிந்தும், புலிகளின் முகமூடிகளை அணிந்து கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக வந்தனர்.

சிவகிரி வனச்சரகர் (பொறுப்பு) மவுனிகா தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் முன்னிலை வகித்தார். வனவர்கள் முருகேசன், அம்பலவாணன், ரவீந்திரன், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்